வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

தேவாங்கர் வரலாறு







தேவாங்கர்களின்  முதல் வித்தான தேவலர் தோற்றம்

 தேவர்களின் வேண்டுகோளின் படி அனைவருக்கும் ஆடைகள் தயாரித்துக் கொடுப்பதற்காக  சிவபெருமான் தன் சத்யோஜாதம் என்ற மேற்கு நோக்கிய முகத்தின் நெற்றிக்கண்ணில் இருந்து (இதயக்கமலத்திலிருந்து என்றும் சொல்வர்) தேவலரை தோன்ற செய்தார் (பின்னாளில் தேவலர் தேவாங்கன் என்று பெயர் பெற்றார்)

சிவபெருமான்  அவரிடம் நீ திருமாலிடம் சென்று அவரிடம் உள்ள உந்திக் கமல நூலை பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளிப்பாயாக மேலும்  நீ  ஆமேதநகருக்கு சென்று ஆட்சி செய்து கொண்டிருப்பாயாக  என்று அருளினார்.

தேவாங்கர் குலதெய்வம் ஸ்ரீ சௌடேஸ்வரி தோற்றம்

தேவலர் சிவபெருமான் ஆணைப்படி ஸ்ரீ நாராயணணிடம் சென்று அவரிடம் நூலைப் பெற்று வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் அசுரர்கள் அவரிடம் இருந்து நூலை அபகரிக்க எத்தனித்தனர். இதனால் அங்கு ஒரு பெரிய போர் ஏற்பட்டது  தேவலர் ஶ்ரீ நாரயண் கொடுத்த சக்கர ஆயுதத்தால் அவர்களிடம் போராடிப் பார்த்தார் அவர்களை வெட்ட வெட்ட  சிந்திய இரத்தத்திலிருந்து எண்ணிலடங்கா அசுரர்கள் தோன்றி போரிட்டனர்.  ஏதாவது ஆபத்து என்றால் என்னை அழை  என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்த அன்னை பரமேஸ்வரியை தேவலர்  எண்ணித் துதித்தார்.

தேவலர் அழைத்தவுடன் பரமேஸ்வரியும் அவரின்  நிலைமையை அறிந்து சூரியப்பிரகாசம் பொரிந்திய கிரீடம் தரித்தவராய் சிங்க வாகனத்தில் சூலாயுதபாணியாய் அங்கு தோன்றி ஆவேசத்துடன் அசுரர்களைத் தாக்கினார். அவர்களின் உடம்பிலிருந்து சிந்திய இரத்தத்தை கீழே சிந்த விடாமல் சிங்கம் குடிக்க, அசுரர் படைகள் யாவும் மடிந்தன. தேவலர் காபாற்றப்பட்டார். ஒளி பொருந்திய கிரீடத்தைத் தாங்கியிருந்ததால் சவுடநாயகி (சௌடேஸ்வரி அம்மன்) ஆனார் .

அமாவாசையின் சிறப்பு
   
 சௌடேஸ்வரி அம்மன் தேவலரிடம் இன்று ஆடி அமாவாசையன்று நான் உனக்காகத் தோன்றியதால் எனக்கு இன்று பிறந்த நாளாகும். நான்  உன் உயிரை காத்ததால் உனக்கும் இந்த நாள் பிறந்த நாள் ஆகும். ஆகவே அமாவாசை நாட்களில் நீயும் உன் குல மக்களும் என்னை நினைத்து வழிபாடு செய்தால் எல்லா நன்மைகளையும் பெறுவீர்கள்.

தேவாங்கர்களுக்காகவே நான் இந்த அவதாரம் எடுத்து வந்ததால் தேவாங்கர் குல மக்கள் எப்பொழுது அழைத்தாலும் நான் வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்று சொல்லி மறைந்தார்

தேவலரின் ஆட்சி

 தேவலர் சகர நாட்டின் தலைநகரான ஆமேதநகரை அரசாட்சி செய்து கொண்டு ஆடைகள் நெய்து அனைவருக்கும் அளித்து சிவபெருமான் இட்ட கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

தேவாங்கர் சந்ததி

 தேவலர் தன் சந்ததியரும் தொடர்ந்து ஆடைகள் தயாரிப்பதற்கான  நூலுக்காக திருமாலிடம் வேண்ட, திருமாலும் மானி, அபிமானி என்னும் இருபெண்களை உலகத்திற்கு அனுப்பி  அவர்களை பருத்தி செடியாக முளைக்கும்படி செய்தார்.

தேவலர் தன் தலைமுறையில்  வந்தவர்களுக்கு மகன்களாக மீதியுள்ள ஆறு பிறப்புகள் பிறப்பெடுத்து ஆமேதநகரை ஆட்சிசெய்து சிவபெருமான் இட்ட கட்டளைகளை அனைத்தும் நிறைவு செய்தார்.

பின் வந்த தலைமுறைகளில் காளசேன மன்னனுக்கு மக்கட்பேறு இல்லை. பல நாட்டு மன்னரின் மகள்கள் 10,000- பேரை மணந்தான் யாருக்கும் மக்கட்பேறு இல்லை. கவுதம முனிவரின் உதவியால் புத்திரகாமேட்டி யாகம் செய்தார் அதில் அமிர்தம் கிடைத்தது.  அந்த அமிர்தத்தை உண்டு 10 ஆயிரம் மனைவிகளும் 10 ஆயிரம் மக்களை பெற்றனர்

10 ஆயிரம் மக்களும் 700 முனிவர்களால் தீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் பெயர்கள்  700 கோத்ரங்களாக ஆயின. 10 ஆயிரம் மக்களும் 10 ஆயிரம் குலங்களாக ஆகி  தங்கள் குலங்களை பெருக்கினர் .




தேவாங்கர்களின் சமூகக் கட்டுபாடுகளின் தோற்றம்.

 காளசேன மன்னன் இந்த 10 ஆயிரம் பேரில் மூத்தவனான ரூபசேன மன்னனுக்கு முடிசூட்டி ஆட்சியை ஒப்படைத்தான். இவர் வழியில் வந்த ஏகோராமன் என்னும் விருபாட்சன்  சமுகக் கட்டுப்பாடுகளையும்  ஒழுக்க நியதிகளையும் வகுத்தான்.  சமுகக் கட்டுபாட்டுக்காக சிம்மாசன பீடாதிபதிகளையும், ஆசாரசீலம்,  தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைபெற குரு பீடாதிபதிகளையும் நியமித்தான்.

 இந்த அமைப்புகளின் வழி, நெறி முறைகளை தேவாங்ககுல மக்கள் இன்று வரை பின்பற்றி வருகின்றனர். இன்றும் தேவாங்கர் நெசவுத் தொழிலைக் குலத் தொழிலாகக் கொண்டும், பூணூல் முதலான பஞ்ச சூத்திரங்களைத் தயாரித்து மற்ற குலத்தாருக்கும் வழங்கியும் வருகின்றனர்.

திரிலோக ஜகத்குருவான தேவலரின் நேரடி வம்சாவளியினர் தேவாங்கர். எனவே தேவாங்கர் மற்ற குலத்தாருக்கு ஆடை நெய்து தருவதுடன், புரோகிதர்களாகவும் விளங்கி வந்தனர். சிகாய யஞ்ஞோப வீதங்களுடன் திரிகால சந்தியா வந்தனத்துடன் “ஆஸ்வலாயன” தர்ம சூத்திரத்தின்படி வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இதுவரை கண்ட செய்திகளினால், குலங்களில் முதன்மை பெற்ற குலம் தேவாங்க தெய்வீக பிராமண குலமே என்பது விளங்கும். தேவாங்கரின் குலம் உற்பத்தியான நோக்கம், பல்கிப் பெருகிய விதம் ஆகியவற்றை அறிவதால், இக்குலத்தில் நாம் பிறந்த காரணமும், நம் வாழ்வை எப்படி நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவும் பிறக்கும்.



1 கருத்து: