வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

சங்கு மஹரிஷி






நமது தேவாங்க குலம், குடிகேலார் வங்குசத்திற்கு கோத்திர கர்த்தா சங்கு மஹரிஷி எனப்படும் சாங்கியாயன மஹரிஷி ஆவார்.

சங்கு மஹரிஷி என்பது தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்படும் பெயராகும். சாங்கியாயன மஹரிசி என்னும் பெயரே கன்னடத்தில் சாங்கிய மஹரிஷியாகவும், சைங்கல்ய மஹரிஷியாகவும் தமிழ்நாட்டில் சங்கு மஹரிஷியாகவும் மருவியுள்ளது. மகாபாரதத்தில் இவர் சாலங்கியாயன மஹரிஷியாகச் சொல்லப்படுகிறார். இக்கோத்திரத்தில் உள்ள குலத்தோர்  தமது மஹரிஷியின் பெயர் மருவியுள்ளது எனத் தெரிந்தும் தம் கோத்திர கர்த்தாவை சங்கு மஹரிஷி என கூறிக்கொள்கிறார்கள். சங்கு மஹரிஷியின் பெயர் புராணங்களில் எங்கு தேடினாலும் கிடைக்காது.


மகாபாரதம் சொல்லும் கதைகள்


சாங்கியாயன மஹரிஷி, விஷ்வாமித்திர மஹரிஷியின் மகன்களில் ஒருவர் என்று மகாபாரதம் சொல்கிறது. இவர் ரிக் வேதம் ஓதுபவர். ரிக் வேதத்தில் சாங்கியாயனம், ஆஸ்லவாயனம், ஆத்ரேயம், போதாயனம், காத்யாயனம் ஆகியவை மிகவும் அறியப்பட்ட சூத்திரங்கள் ஆகும். சாங்கியாயன சூத்திரத்தை எழுதியவர் சாங்கியாயனர் ஆவார்.

இனி சாங்கியாயனரின் வம்சப் பரம்பரையை அறிந்து கொள்வோம். விசுவாமித்திரர் சந்திர வம்சத்து பரத குலத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரது வம்ச பரம்பரை கீழ்கண்டவாறு.

பிரகஸ்பதியின்(குரு) மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடி புதன் என்னும் மகனைப் பெற்றாள். சூரியனின் மகன் வைவஸ்வத மனுவின் மகன் இளன். இளன் வேட்டையாடச் சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவஸ். இவன் மூலமே மகாபாரததின் சந்திர குலம் பூமியில் உதயமாகியது.

அந்தப் புரூரவ மாமன்னனுக்கு ஆயுஸ், அமாவஸ், விசுவாவஸ், சுருதாயு, சதாயு, அயுதாயு என்ற ஆறுபிள்ளைகள் பிறந்தார்கள்.  இவர்களில் அமாவஸ் என்பவனுக்கு பீமன் என்ற பிள்ளை பிறந்தான். அவனுக்குக் காஞ்சனன் பிறந்தான். காஞ்சனனுக்கு மகன் கதோத்திரன். இவன் பல யாகங்களைச் செய்து அஜமீடன் எனப் பெயர்பெற்றவன். அவனுக்கு ஜன்னு என்ற மகன் இருந்தான்.

ஜன்னு ஒருமுறை யாகம் செய்து கொண்டிருக்கும் போது கங்கை நதியானது அந்த யாகசாலைக்கு வந்து யாவற்றையும் முழுகடித்தது. ஜன்னு இறைவனை தியானித்து முழு கங்கையையும் குடித்து விட்டான். பிறகு தேவ ரிஷிகள், அவனை வேண்டியபின் கங்கையை காதின் வழியே விடுவித்தான். அதானல் கங்கைக்கு ஜானவி என்ற பெயரும் உண்டாகியது. அந்த ஜன்னுவுக்கு சுமந்து என்பவன் பிறந்தான். இவன் சிந்து நதியின் மத்தியில் இருந்த தீவில் பிறந்ததால் சிந்துத் த்வீபன் எனவும் அறியப்பட்டான்.

சுமந்துவுக்கு அசகனும், அசகனுக்கு பலாகாசுவனும் பிறந்தனர். பலகாசுவனின் மகன் குசன். இவன் வல்லபன் எனவும் அறியப்பட்டான்.

குசனுக்கு குசிகன் பிறந்தான். குசிகன் தனக்கு இந்திர சமானனான புத்திரன் உண்டாக வேண்டும் என்று தவம் செய்தான். அப்போது தேவேந்திரன், நமக்குச் சமானமாய் மற்றொருவன் உண்டாக வேண்டாம் என்று தானே அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன் பெயர் காதி.

மன்னன் காதியின் மகனே விசுவாமித்திரர் ஆவார். குசிகனின் வமிசத்தவர் என்னும் பொருளில் இவர் கௌஷிகன் என அழைக்கப்பட்டார்.  பின்னர் அவர் அரசைத் துறந்து மாபெரும் ரிஷியான பொழுது விசுவாமித்ரர் என்ற பெயர் கிடைத்தது.

மதுச்சந்தர், தேவராதர், அக்ஷீணர், சகுந்தர், பப்ரு, காலபதர், யக்ஞவல்கியர், ஸ்தூணர், உலூகர், முத்கலர், சைந்தவயானர், பல்குஜங்கர் {பர்ணஜங்கர்}, காலவர், ருசி, வஜ்ரர், சாங்கியாயனர், லீலாத்யர், நாரதர், கூர்ச்சாமுகர், வாதுலி, முசலர், வக்ஷோக்ரீவர், ஆங்கரிகர், நைகதிருக், சிலாயூபர், சிதர், சுசி, சக்ரகர், மாருதந்தவ்யர், வாதக்னர், அஸ்வலாயனர், ஸ்யாமாயனர், கார்க்யர், ஜாபாலி, ஸுஸ்ருதர், காரீஷி, ஸம்ச்ருத்யர், பர பௌரவர், தந்து, கபிலர், தாரகாயனர், உபகஹனர், அர்ஜுனாயணர், மார்கமித்ரர், ஹிரண்யாக்ஷர், ஜங்காரி, பாப்ரவாஹணர், பூதி(சூதி), விபூதி, சூதர், ஸூரக்ருத், ஆராணி, நாசிகர், சாம்பேயர், உஜ்ஜயனர், நவதந்து, பகனகர், ஸேயனர், யதி, அம்போருதர், அமத்யஸின் {சாருமத்ஸ்யர்}, சீரிஷின், கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேக்ஷின்,  நாரதி ஆகிய முனிவர்கள் அனைவரும் விஷ்வாமித்ரரின் மகன்களாகவும், பிரம்மஞானத்தை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.


கௌஷிக மஹரிஷி யார்?



பிருகுவின் வம்சம் பார்க்கவ வம்சம்; புருவின் வம்சம் பௌருவ வம்சம் என்பதைப் போல குஷிகரின் வம்சம் கௌஷிக வம்சமாகும். குஷிகர் விசுவாமித்திரரின் பாட்டனார் ஆவார். கௌஷிகன் என்பது குஷிகரின் வமிசத்தைச் சார்ந்தவன் என்பதைக் குறிக்கும் வம்சப் பெயரே தவிர விசுவாமித்திரரின் இயற்பெயர் இல்லை.

கௌஷிகர் என்னும் இன்னொரு முனிவரின் கதை மஹாபாரதத்தில் உள்ளது. அந்தக் கதை கொங்கணச் சித்தரின் கதையைப் போலவே உள்ளது. கொக்கை எரித்த கௌஷிகர் தம் தவவலிமை ஒரு பத்தினியிடம் தோற்றதால் அந்தப் பத்தினியின் அறிவுரைப்படி ஒரு வேடனிடம் ஞானம் பெறுகிறார். கௌஷிக மஹரிஷி என மஹாபாரதத்தில் சொல்லப்படுவது நமது கொங்கணச் சித்தராக இருக்கலாம்.

கொக்கை எரித்த கொங்கணர் தம் தவவலிமை ஒரு பத்தினியிடம் தோற்றதால் அந்தப் பத்தினியின் அறிவுரைப்படி தவம் செய்ய, கௌதம மகரிஷி தோன்றி வேள்விகளை விடுத்து சித்த மரபிற்கு திரும்ப அறிவுரை சொல்கிறார்.

ஆக ஒரே ரிஷியின் கதையையே சித்தமரபும் வேதமரபும் அவரவர் நோக்கில் சொல்லி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்தக் கௌஷிகர் தான் கௌஷிக கோத்திர ரிஷி ஆவார். விசுவாமித்திரர் அல்ல.


கோத்திர ரிஷியாக வரும் தேவல மஹரிஷி யார்?



சப்த ரிஷிகளில் மூத்தவர் மரீசி ஆவார். இந்த மரீசியின் மகன் கஷ்யப ரிஷி ஆவார். இவர் தவமிருந்து பெற்ற மகன் அசிதர் ஆவார். இந்த அசிதரின் மூத்த மகன் தேவலர் எனப்படும் ரிஷி ஆவார்.

இந்தத் தேவலரே நமது தேவாங்க குலத்தில் தேவல ரிஷி கோத்திர கர்த்தா ஆவார்.  மஹாபாரதத்தில் தேவாங்க குல முன்னோடியான தேவலரையும், அசிதரின் மகன் தேவலரையும் வேறுபடுத்திக்காட்ட இவரை அசித-தேவலர் என்றே சொல்கிறார்கள்.


தௌம்யர், ஆருணி உத்தாலகர், கஹோளர்



அசிதரின் இன்னொரு மகன் தௌம்யர் ஆவார்.  தௌம்யரை பாண்டவர்கள், திரௌபதியின் சுயம்வரத்திற்குச் செல்லும் முன் தங்களுடைய புரோகிதராக ஏற்றுக் கொள்கிறார்கள்.  இறுதிவரை அவர் பாண்டவர்களின் புரோகிதராகவே இருந்தார்.

இந்த தௌம்யரின் சிஷ்யர் ஆருணி உத்தாலகர், ஆருணி உத்தாலகரின் சிஷ்யர் கஹோள கௌஷீடகி ஆவார். இந்த கஹோள கௌஷீடகியின் சிஷ்யர்களில் ஒருவரே சாங்கியாயனர்.

கௌஷீடகம் ஒரு மலைநிலமாகும். கௌஷீடகி என்பது இந்த குரு பரம்பரையின் பொதுப்பெயராக உள்ளது. இங்கு வாழ்ந்தவர் அசித முனிவர் ஆவர். அசிதரின் மைந்தராகப் பிறந்த தௌம்யர் தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன் பொருட்டு அவர் அயோத தௌம்யர் என்றழைக்கப்பட்டார்.

அயோத தௌம்யருக்கு ஆருணி, உபமன்யூ, வேதன் என்னும் மூன்று மாணவர்கள் அமைந்தனர்.  ஆருணி கௌதம கோத்திரத்தைச் சார்ந்த அருண ரிஷியின் மகனாவார்.

அயோத தௌம்யர் ஆசிரமம் அமைத்து வேதக்கல்வியை அளித்ததோடு அல்லாமல்  மலையின் பள்ளத்தாக்குகளில் காடுகளைத் திருத்தி, வயல்கள் அமைத்து விவசாயத் தொழிலையும் செய்வித்தனர். அவரது மாணவர்களில் ஆருணியும் வேளாண்மை செய்தான்.

ஒரு சமயம் ஆசிரியர் ஆருணியை தௌம்யர், வயலுக்கு நீர்பாய்ச்ச சொல்லியிருந்தார். ஆருணி வயலில் நீரை நிரப்பி அதனுள் இருக்கும் நீரை வெளியில் செல்லாதபடி வடிமடையில் மண்ணை நிரப்பி அடைத்தான்.

 நீரின் வேகமானது அந்த மண் அணையை சில நிமிடங்களிலேயே கரைத்துவிட்டது. இவ்விதம் பல முறைகள் தன்னால் கட்டப்பட்ட மண் அணைகள், எளிதில் நீரால் கரைக்கப்படுவதை நோக்கி மனம் நொந்தான்.

குருவின் உத்தரவைச் செயலில் கொண்டு வரமுடியவில்லையே என்று ஏங்கினான். முடிவில் ஆருணி வடிமடையில், தன் உடலையே அணையாகச் செய்து நீரை வெளியே செல்லாமல் தடுக்க திட்டமிட்டு அதனில் படுத்துக்கொண்டான்.

அவனுடைய உடலால் வடிமடை அடைக்கப்பட்டவுடன், நீரின் ஒரு சிறிய துளி கூட வெளியில் செல்லவில்லை. இப்படி மூன்று தினங்கள் சென்றுவிட்டன.

நான்காவது தினத்தில் தௌம்ய முனிவர் சிஷ்யர்களை நோக்கி “மூன்று நாட்களாக ஆருணியைக் காணவில்லையே. அவன் எங்கு சென்றான்” என்று வினவினார். “ஹே குரு  தங்களின் உத்தரவின்படி வயலின் வடிமடையை அடைக்கச் சென்றிருக்கிறான்” என்று சிஷ்யர்கள் பதிலளித்தனர். அதனைச் செவியுற்ற தௌம்யர், உடனே சிஷ்யர்களுடன், வயலை அடைந்தார். “ஹே ஆருணி! குழந்தாய்! தாமதியாமல் என் அருகாமைக்கு வந்து சேருவாயாக!” என்று உரக்கக் கூவி அழைத்தார். குருவின் குரலைக் கேட்டவுடன் ஆருணி அணையை இரண்டாகப் பிளந்து அதனிலிருந்து எழுந்து வந்தான்.

’ஹே குரு! தங்களுடைய ஆணைப்படி வயலின் வடிமடையை மண்ணால் அடைக்க முடியாததினால் நான் அதில் படுத்திருந்து அடைத்தேன். தங்கள் குரலைக் கேட்டு புறப்பட்டு வந்தேன்’ என்று கூறி வணங்கினான். மேலும் வேறு எந்த பணியைச் செய்யவேண்டுமென்று வினவினான். அதைக்கேட்ட தௌம்யர் மிக்க மகிழ்ச்சி அடைந்து ஆருணி! உன் குரு பக்தியை மெச்சினேன். அணையைப் பிளந்துகொண்டு எழுந்து வந்ததால், உனக்கு இன்று முதல் உத்தாலகன் பெயர் வழங்கப்படட்டும். உனக்கு வாழ் நாளில் எல்லாவிதமான சிறப்புகளும் தடையின்றி குறையில்லாமல் ஏற்படட்டும். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும், தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் உன் உள்ளத்தில் எப்போதும் தெளிவாகத் துவங்கட்டும்” என்று ஆசி கூறினார்.

இதனால் ஆருணி, தௌம்யரின் முதன்மைச் சீடனானார். ஆருணி உத்தாலகரின் இளையமகன் ஸ்வேதகேது அசித-தேவல ரிஷியின் மகள் சுவத்சலையை மணந்து கொண்டவர்.

இந்த ஆருணியின் பல சீடர்களில் ஒருவர் கஹோளர். கஹோளர், தன்னை குருவின் சேவைக்கு அர்ப்பணித்து, நீண்ட காலத்திற்கு சேவை செய்து கல்வி கற்றார். இவரது சேவையை உணர்ந்த குரு ஆருணி உத்தாலகரும், தனது மகளான சுஜாதாவையும், சாத்திரங்கள் மீதான ஆளுமையையும்  கஹோளருக்குக் கொடுத்தார். கஹோளரின் மகனே அஷ்ட வக்கிரர் ஆவார்.

அஷ்ட வக்கிர முனிவரின் உண்மைப் பெயர் தெரியவில்லை. அஷ்டவக்கிரர் யஜூர் வேதப்பிரிவைச் சார்ந்தவர். மானவ க்ருஹ சூத்ரா, அஷ்டவக்கிர கீதை, அஷ்டவக்ர சம்ஹிதை போன்ற பல நூல்களை எழுதி இருக்கிறார்.


சாங்கியாயனரும் அவரின் சிறப்புகளும்


கஹோளரின் இன்னொரு சீடரே சாங்கியாயனர் ஆவார். நெசவு சமுதாயத்தில் பிறந்த நமது வம்சத்திற்கு குடிகேலார் / கொண்டவன்தவரு என்ற பெயர் உண்டான அடிப்படைக் காரணம் சாங்கியாயன ரிஷி ஆசிரமமாய் இருக்கக் கூடும்.

இவர்களது ஆசிரமம் மலைப்பகுதிகளில் இருந்ததால், இவரிடம் கற்ற தேவாங்க குலத்தவர்களுக்கு கொண்டவன்தவரு என்ற பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், மலையின் பள்ளத்தாக்குகளில் இந்த ஆசிரமவாசிகள் நெல்லைப் பயிர் செய்தனர். எனவே நெல்லறுக்கும் கதிர் அரிவாளான கொடகோலு இவர்களின் உபகரணமாய் இருந்திருக்கிறது. எனவே குடகோலதவரு – குடிகேலாரு என்ற பெயரும் உண்டாகி இருக்கலாம்.

வேளாண் தொழில் செய்த பல குலத்தவருக்கும் புற்று வடிவான நாகசக்தியின் அம்சமான அங்காள பரமேஸ்வரியும் வம்ச தெய்வமாக அமைந்திருக்கிறது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி நமது குடிகேலார் வம்சத்திற்கும் தெய்வமாக ஆகியிருக்க வேண்டும்.

ஆக பிறப்பால் நெசவும், குருகுலத்தால் வேளாண்மையும் இந்த ரிஷி கோத்திரத்தாரின் குலத் தொழில்களாக மாறின.

நமது கோத்திரம் பிறப்பு வழியே வந்ததல்ல. குரு வழியே வந்ததாகும்.  சாங்கியாயனர், விஷ்வாமித்ர வம்சத்தைச் சார்ந்தவர் என்றாலும், தேவாங்க குலத்தின் விஷ்வாமித்ர, கௌசிக, தேவாரத  கோத்திரத்தார் நமக்குப் பங்காளிகள் அல்ல. ஆருணி உத்தாலகரின் மகளை சிஷ்யர் கஹோளர் மணம் செய்து கொண்டதை நினைவில் கொள்க.

சாங்கியாயனர், சாங்கியாயன ஆரண்யகம், சாங்கியாயன கிரஹ சூத்ரம், சாங்கியாயன ஸ்ரௌத சூத்ரம், சாங்கியாயன தந்திரம்  போன்ற பல நூல்களை எழுதி உள்ளார்.

கிருஹ சூத்திரம் என்பது விவாகம், நாமகர்ணம், கர்ணவேதம், சஷ்டியப்த பூர்த்தி போன்ற இல்லறக் கர்மங்களை செய்யும் வகையினை விவரிக்கும். ஸ்ரௌத சூத்திரம் வேள்விகள் செய்யும் வகையினை விவரிக்கும்.

சாங்கியாயனர் எழுதிய சாங்கியாயன ஆரண்யகம் ரிக் வேதத்தின் சூத்திரமாக விளங்குகிறது.  இதில்

1,2 அத்தியாயங்கள் மஹாவிரதங்களை சொல்கின்றன.

3-6 அத்தியாயங்கள் கௌஷீடகி உபநிஷதத்தை சொல்கின்றன.

7-8 அத்தியாயங்கள் சம்ஹித உபநிஷதத்தை சொல்கின்றன.

9 ஆவது அத்தியாயம் பிராணனின் உயர்வைச் சொல்கிறது.

10 ஆவது அத்தியாயம் வேள்விகளின் சிறப்பைச் சொல்கிறது. புருஷனின் உடல் பாகங்களில் கண்ணில் சூரியன், மூச்சில் வாயு, பேச்சில் அக்னி, மனதில் சந்திரன் என அனைத்து தேவர்களும் இருப்பதைக் கூறி அதன் வழியே தேவர்களை திருப்தி செய்வதைச் சொல்கிறது.

11 ஆம் அத்தியாயம் நோயிலிருந்தும், மரணத்திலிருந்து காத்துக் கொள்ள பல பரிகாரங்களைச் சொல்கிறது.

12 ஆம் அத்தியாயம் பிராத்தனைகளின் பலனைச் சொல்கிறது.

13 ஆம் அத்தியாயம் உடல் சார்ந்த இன்பங்களை கைவிட்டு, ஞானம் கற்றல், கட்டுப்பாடு, நித்தியாசனங்கள்,  தவம் போன்றவற்றை கைகொள்ள அறிவுறுத்துகிறது.

14 ஆம் அத்தியாயம் நானே ப்ரம்மன் என்ற மந்திரத்தை சொல்கிறது. மந்திரத்தை பொருளுணராமல் சொல்வதின் கெடுதல்களையும் சொல்கிறது.
15 ஆம் அத்தியாயம் இந்த ஆரண்யகத்தின் குரு பரம்பரையைச் சொல்கிறது. அந்த குருபரம்பரையை பின்வரும் படத்தில் காணலாம்.






ரிக்வேதிகள் காயத்ரி தேவியை ஆவாஹணம் செய்து துதி செய்யும் பொழுது காயத்ரி தேவியை சாங்கியாயனரின் கோத்திரத்தைச் சார்ந்தவளே என்றுதான் சொல்கின்றனர்.


காயத்ரியை
விஷ்வாமித்ர மஹரிஷி அருளியது

ஸ்வைத தேவதா: அக்னிர் முகம்:
ப்ரம்மா சிரஹ்: விஷ்ணுர்  ஹ்ருதயம்:
ருத்ர சிகா: ப்ருத்வி யோனிஹ்:
ப்ராண அபான வ்யான உதான சமான சப்ரனா:
ஸ்வேத வர்ணா: சாங்கியாயன சகோத்ர காயத்ரி:
சதுர்விம் சத் அக்ஷ்ர: திரிபாதா: சத்குக்ஷி:
பஞ்ச சிரசோ உபநயன வினியோகா:

வெண்ணிறம் கொண்ட தேவி; அக்னியே முகமாய் அமைந்தவள்; பிரம்மனே சிரமாய் அமைந்தவள்; விஷ்ணுவே இதயமாய் அமைந்தவள்; சிவனே முடியாய் அமைந்தவள்; பூமியையே யோனியாய் கொண்டவள்; பிராணன், அபானன், வியானன், உதானன் சமானன் என்ற ஐந்து பிராண வாயுக்கள் மற்றும் நாகம், கூர்மம், க்ருகாரம், தேவதத்தம் என்ற ஐந்து உபப்பிராணன்களின் வடிவமாய் அமைந்தவள்; வெண்மை நிறத்தவள்; சாங்கியாயனரின் சக கோத்திரத்தில் உதித்த காயத்ரி தேவி; 24 அக்ஷர வடிவானவள்; மூன்று பாதங்கள் கொண்டவள்; சிக்ஷை, வியாக்ரணம், சந்தம்,  நிருத்தம், சோதிடம், கல்பம் என வேதத்தின் ஆறு அங்கங்களை ஆறு வயிறுகளாக கொண்டவள்; துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி, சாவித்திரி, ராதாதேவி எனும் ஐந்து சக்திகளை ஐந்து திருமுகங்களாகக் கொண்ட அவளே உபநயனத்தின் போது அளிக்கப்படுகிறாள்.

தனக்குப் பிறந்த சாங்கியாயன ரிஷியை காயத்ரி தேவி துதியில் சேர்த்து பாடியதன் மூலம் சாங்கியாயனர் மீது விஷ்வாமித்திரர் கொண்ட அபரிதமான பாசமும், மதிப்பும் விளங்கும்.


ஸ்ரீமத் பாகவதத்தில் சாங்கியாயனர்

ஸ்ரீமத் பாகவதம், மூன்றாவது காண்டம் 8 ஆவது அத்தியாயம், பாகவதம் சொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது. இது சாங்கியாயன முனிவரைப் பற்றியத் தகவலைச் சொல்கிறது.

ஒருமுறை சனத்குமாரர் உள்ளிட்ட முனிவர்கள் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனைத் தரிசிக்க பாதாள லோகம் சென்றனர். அவரிடம் பகவான் வாசுதேவனின் பெருமைகளையும், தத்துவங்களையும் உபதேசிக்குமாறு சனத்குமாரர் வேண்டினார்.

நாகக் கன்னிகைகளால் தங்களுக்கு ஏற்ற கணவன் அமைய தினமும் பூஜிக்கப்படும் ஆதிசேஷனின் காலடியில் முனிவர்களின் அர்ப்பணிப்பான கங்கை நீர் படிய,  விஷ்ணு தியானத்தில் மூழ்கி இருந்த ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளின் ஈராயிரம் கண்களையும் தாமரை மலர் மொட்டவிழ்வது போல அழகுடன் திறந்தார். சனகாதி முனிவர்கள் அதிசேஷனை பலவாறு புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்ய, சங்கர்ஷணர்(ஆதிசேஷன்) பாகவதத்தை சனத்குமார முனிவருக்கு பாகவதத்தை உபதேசித்தார். சனத்குமாரர் அந்த பாகவதத்தை சாங்கியாயன ரிஷிக்கு உபதேசித்தார். சாங்கியாயன ரிஷி பரமஹம்ஸர்களில் முதன்மையானவர் ஆவார்.

சாங்கியாயன ரிஷியிடம் இருந்து தேவகுருவாகிய பிரஹஸ்பதி பாகவதம் கற்று அதை தேவலோகத்திற்கு எடுத்துச் சென்றார். பின்னர் அவர் அதை அவர் கிருஷ்ணனின் தீவிர பக்தரான உத்தவருக்கும் சொன்னார்.

வியாசரின் தந்தையான பராசர முனிவர் சாங்கியாயன ரிஷியிடம் இருந்து பாகவதம்  கற்றார். இதை புலஸ்திய முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க, பராசரர் மைத்ரேயருக்கு உரைத்தார். மைத்ரேயர் அதை விதுரருக்கு உரைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக